அட்லாண்டிக் கடலில் ஹாண்டா வைரஸ் பரவல்: 3 பேர் உயிரிழப்பு; துறைமுக அனுமதி மறுக்கப்பட்டதால் கப்பல் கடலில் உதவிக்காக காத்திருப்பு

Rhaman Yusuf
2 Min Read

அட்லாண்டிக் பெருங்கடலில், கேப் வெர்டே தீவுகளுக்கு அருகே, எம். வி.ஹொண்டியூஸ் (MV Hondius) என்ற சுற்றுலா கப்பல் கடலில் தங்கியபடி அவசர உதவிக்காக காத்திருக்கிறது. ஹாண்டா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பின்னணியில், கப்பலில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூவர் தீவிரநிலையிலும் உள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக சுகாதார அமைப்பு (World Health Organization -WHO) மற்றும் கப்பல் இயக்குநர் ஒஷன் வய்ட் எக்ஸ்பெடிஷன்ஸ் (Oceanwide Expeditions) வெளியிட்ட தகவலின்படி, இந்த அரிதான வைரஸ் பரவல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. எலிகள் மற்றும் அவற்றின் கழிவுகள் மூலம் பரவும் இந்த நோய், சில நேரங்களில் மனிதர்களிடையிலும் பரவ வாய்ப்பு உள்ளதாக WHO தெரிவித்துள்ளது.

அர்ஜென்டினாவின் உஷுவாய் (Ushuaia) துறைமுகத்தில் இருந்து ஏப்ரல் 1ஆம் தேதி இந்த கப்பல் பயணம் தொடங்கியது. அந்த நேரத்தில் எந்த பயணிக்கும் ஹாண்டா வைரஸ் அறிகுறிகள் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த நோயின் அறிகுறிகள் வெளிப்பட பல வாரங்கள் ஆகக்கூடும் என்பதால், தொற்று எப்போது ஏற்பட்டது என்பது இன்னும் தெளிவாகவில்லை.

கப்பலில் மொத்தம் சுமார் 150 பேர் உள்ளனர். இதில் 87 பயணிகளும், 61 பணியாளர்களும் அடங்குவர். அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதில் உள்ளனர். தற்போது, யாரும் கப்பலிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படவில்லை.

கேப் வெர்டே சுகாதார அமைச்சகம், பொதுச் சுகாதார பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கப்பலை துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதிக்க மறுத்துள்ளது. இதனால், கப்பல் கடலிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மருத்துவ குழுக்கள் கப்பலுக்கு அனுப்பப்பட்டு நிலைமையை கண்காணித்து வருகின்றன.

ஏற்கனவே தென் ஆப்ரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்ட ஒரு பிரிட்டிஷ் நபருக்கு ஹாண்டா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும், இரண்டு கப்பல் பணியாளர்கள் கடுமையான மூச்சுத்திணறல் அறிகுறிகளுடன் அவசர சிகிச்சை தேவைப்படுகின்றனர்.

உயிரிழந்தவர்களில் ஒருவர் ஜெர்மனியைச் சேர்ந்தவர். அவரது உடல் இன்னும் கப்பலிலேயே உள்ளது. மேலும், ஏப்ரல் 11ஆம் தேதி கப்பலில் இருந்த 70 வயது நெதர்லாந்து நபர் உயிரிழந்தார். அவரது 69 வயது மனைவி பின்னர் தென் ஆப்ரிக்காவில் சிகிச்சை பெற்றபோது உயிரிழந்தார். அவருடைய ரத்தப் பரிசோதனையில் ஹாண்டா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தையடுத்து, தென் ஆப்ரிக்க சுகாதார அதிகாரிகள் தொடர்பு கண்காணிப்பு (contact tracing) நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர். இருப்பினும், பொதுமக்கள் பதற்றப்பட தேவையில்லை எனவும், இந்த வைரஸ் எளிதில் மனிதர்களிடையே பரவாததால் பெரிய அளவில் அபாயம் இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆய்வுகள், ஆய்வக பரிசோதனைகள் மற்றும் தொற்றியல் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தச் சம்பவம், உலகளாவிய கடல் பயணங்களில் தொற்றுநோய்கள் எவ்வளவு வேகமாக அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறது. ஹாண்டா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சர்வதேச சுகாதார அமைப்புகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், கப்பலில் உள்ள பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பே தற்போது மிகப்பெரிய முன்னுரிமையாக மாறியுள்ளது.

Share This Article
Leave a Comment

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன