வெனிசூலா கடற்கரைக்கு அருகிலுள்ள சர்வதேச கடல் எல்லையில், ஒரு எண்ணெய் டாங்கர் கப்பலை அமெரிக்கா தடுத்து நிறுத்தியுள்ளதாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. தடை விதிக்கப்பட்ட எண்ணெய் கப்பல்களின் வரத்து–போகத்தை முற்றிலும் முடக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
சமீப வாரங்களில், வெனிசூலாவைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் அமெரிக்க ராணுவப் படைகள் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ள நிலையில், இது இரண்டாவது முறையாக எண்ணெய் டாங்கர் ஒன்றை அமெரிக்கா குறிவைத்துள்ளது. இந்த கப்பல் சமீபத்தில் வெனிசூலாவில் நங்கூரமிட்டிருந்ததாகவும், கடல்காப்புப் படை அதனைத் தடுத்து நிறுத்தியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
“போதைப் பொருள் தீவிரவாதத்திற்கு நிதியளிக்கப் பயன்படும் தடைசெய்யப்பட்ட எண்ணெய் கடத்தலை அமெரிக்கா தொடர்ந்து தடுக்கிறது. எங்கே இருந்தாலும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்போம்,” என அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவலின்படி, இந்த கப்பலில் தடைசெய்யப்பட்ட எண்ணெய் இருந்தது. போலியான அடையாளத்துடன் இயங்கிய இந்த கப்பல், வெனிசூலாவின் ‘நிழல் கப்பல் படையின்’ ஒரு பகுதியாக செயல்பட்டு வந்ததாகவும், சட்டவிரோத எண்ணெய் வர்த்தகத்தின் மூலம் ஆட்சிக்கு நிதி திரட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வெனிசூலா அரசு, இந்த நடவடிக்கையை “சர்வதேச கடற்கொள்ளை” என வர்ணித்துள்ளது. “சர்வதேச கடல் எல்லையில் தனியார் கப்பலை பறிமுதல் செய்ததும், அதன் பணியாளர்களை காணாமல் ஆக்கியதும் மிகக் கடுமையான சட்ட மீறல்,” என தெரிவித்துள்ள வெனிசூலா, இந்த விவகாரத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் மற்றும் பிற பன்னாட்டு அமைப்புகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாக அறிவித்துள்ளது.
கடல் பாதுகாப்பு ஆய்வாளர்களின் தகவலின்படி, இந்த கப்பல் கரீபியன் கடலில் பார்படோஸ் தீவின் கிழக்கே தடுக்கப்பட்டுள்ளது. அந்த கப்பல், வெனிசூலாவில் இருந்து சுமார் பதினெட்டு இலட்சம் பேரல் எண்ணெய் ஏற்றிச் சென்றதாக கூறப்படுகிறது. அந்த எண்ணெய் ஆசிய நாடுகளுக்குத், குறிப்பாக சீனாவுக்குச் செல்ல திட்டமிடப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா கடந்த இரண்டாயிரத்து பத்தொன்பதாம் ஆண்டில் வெனிசூலா மீது எரிசக்தி துறையில் தடை விதித்ததிலிருந்து, அந்த நாடு ‘நிழல் கப்பல்கள்’ என அழைக்கப்படும் மறைமுக எண்ணெய் கப்பல்களை பயன்படுத்தி வர்த்தகம் செய்து வருகிறது. இக்கப்பல்கள் தங்களின் இருப்பிடங்களை மறைத்து, வேறு பெயர்களில் பதிவு செய்து இயங்குவதாக கூறப்படுகிறது. இதனால், இக்கப்பல்கள் அமெரிக்க நடவடிக்கைகளுக்கு எளிதில் இலக்காகின்றன.
சமீபத்திய கப்பல் தடுக்கப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு, வெனிசூலாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி கணிசமாக குறைந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர். பல கப்பல்கள், பறிமுதல் செய்யப்படும் அபாயம் காரணமாக வெனிசூலா கடல் எல்லைக்குள் நின்று கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், உலக எண்ணெய் சந்தையில் தற்போது போதுமான அளவு இருப்பு இருந்தாலும், இந்த தடை நீண்ட காலம் தொடருமானால், தினசரி பெரிய அளவிலான எண்ணெய் விநியோகம் குறைந்து, விலை உயர வாய்ப்பு இருப்பதாக பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள், வெனிசூலா அதிபர் நிக்கோலாஸ் மதுரோ மீது அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் எடுக்கப்பட்டவை என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். அதே நேரத்தில், அமெரிக்க ராணுவ குவிப்பு தன்னை பதவியிலிருந்து அகற்றும் முயற்சியே என மதுரோ குற்றம் சாட்டியுள்ளதுடன், உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் வளங்களை கைப்பற்றும் நோக்கமே இதன் பின்னணி எனவும் கூறியுள்ளார்.
இதனால், அமெரிக்கா–வெனிசூலா இடையேயான அரசியல் மற்றும் பொருளாதார மோதல், வரும் நாட்களில் மேலும் தீவிரமடையக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.