ஜனவரி 09 வாஷிங்டன்- அமெரிக்க அதிபர் டிரம்ப் அமெரிக்காவை 66 சர்வதேச அமைப்புகளிலிருந்து விலக்கினார்., ஐக்கிய நாடுகள் அமைப்புடன் தொடர்புடைய அமைப்புகள் உட்பட மொத்தம் 66 சர்வதேச நிறுவனங்களில் இருந்து அமெரிக்காவை முழுமையாக விலக்க உத்தரவிட்டுள்ளார். இந்த முடிவு, உலகளாவிய பல்துறை ஒத்துழைப்பிலிருந்து அமெரிக்கா மேலும் விலகும் ஒரு முக்கிய அரசியல் திருப்பமாக பார்க்கப்படுகிறது.

புதன்கிழமை கையெழுத்திடப்பட்ட நிர்வாக உத்தரவின் மூலம், 31 ஐக்கிய நாடுகள் சார்ந்த அமைப்புகள் மற்றும் 35 ஐ.நா. அல்லாத சர்வதேச அமைப்புகளில் அமெரிக்க பங்கேற்பும் நிதியுதவியும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என அரசு துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அமைப்புகள் காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனித உரிமைகள், தொழிலாளர் நலன், குடியேற்றம் மற்றும் சமூகக் கொள்கைகள் போன்ற பல முக்கிய துறைகளில் செயல்பட்டு வருகின்றன. ஆனால் இவை அமெரிக்க தேசிய நலன்களுக்கு எதிரான நோக்கங்களில் செயல்படுகின்றன என வெளிநாட்டு விவகாரத்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா விலக உத்தரவிடப்பட்ட ஐக்கிய நாடுகள் சார்ந்த அமைப்புகளில், காலநிலை மாற்றம் தொடர்பான முதன்மை அமைப்பான UN Framework Convention on Climate Change, பாலின சமத்துவத்தை முன்னெடுக்கும் UN Women, மக்கள்தொகை மற்றும் இனப்பெருக்க நலன் தொடர்பான UN Population Fund, மற்றும் நகர்ப்புற வளர்ச்சி தொடர்பான UN-Habitat உள்ளிட்டவை அடங்கும்.
மேலும், உலகின் முன்னணி காலநிலை அறிவியல் அமைப்பான Intergovernmental Panel on Climate Change, புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்குவிக்கும் International Renewable Energy Agency, மற்றும் International Solar Alliance போன்ற அமைப்புகளிலிருந்தும் அமெரிக்கா விலகுகிறது.
இந்த முடிவை நியாயப்படுத்திய வெளிநாட்டு விவகார செயலாளர் Marco Rubio, சில சர்வதேச நிறுவனங்கள் அமெரிக்க நலன்களுக்கு முரணான சமூக மற்றும் கொள்கை நோக்கங்களை முன்னெடுக்கின்றன என தெரிவித்தார். குறிப்பாக, காலநிலை, தொழிலாளர் உரிமைகள் மற்றும் குடியேற்றம் தொடர்பான செயல்பாடுகள் அரசின் பார்வையில் ஏற்றுக்கொள்ள முடியாதவை என கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்பே, பாரிஸ் காலநிலை உடன்படிக்கை, உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு ஆகியவற்றிலிருந்து அமெரிக்கா விலகியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், சர்வதேச உதவித் திட்டங்களில் நிதி குறைக்கப்பட்டதால், பல வளர்ந்து வரும் நாடுகளில் மனிதாபிமான மற்றும் சுகாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டில் புதைபடிவ எரிபொருள்களை தீவிரமாக ஆதரிக்கும் கொள்கையை டிரம்ப் நிர்வாகம் முன்னெடுத்து வருகிறது. காலநிலை மாற்றத்தை தொடர்ந்து மறுக்கும் நிலைப்பாட்டுடன், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முயற்சிகளை நிராகரிக்கும் போக்கு இந்த சர்வதேச விலகல்களிலும் பிரதிபலிக்கிறது.
இந்த நடவடிக்கை, உலகளாவிய காலநிலை முயற்சிகள், மனித உரிமை பாதுகாப்பு மற்றும் சர்வதேச பாதுகாப்பு ஒத்துழைப்புகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்காவின் இந்த முடிவு, சர்வதேச அமைப்புகளில் அதிகார சமநிலையை மாற்றக்கூடியதாகவும், வளர்ந்து வரும் நாடுகளுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியதாகவும் பார்க்கப்படுகிறது.