தென் சூடானின் ஜோங்க்லே மாநிலத்தில் ராணுவ நடவடிக்கை – பொதுமக்கள் மற்றும் ஐ.நா. பணியாளர்கள் வெளியேற உத்தரவு

WH News Bureau
3 Min Read

ஜூபா, ஜனவரி 26

ஆப்பிரிக்காவின் இளம் நாடான தென் சூடானில் நிலவும் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஜோங்க்லே மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள், ஐக்கிய நாடுகள் அமைப்பின் பணியாளர்கள் மற்றும் மனிதாபிமான அமைப்புகள் உடனடியாக வெளியேற வேண்டும் என தென் சூடான் ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

எதிரணிப் படைகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ள தென் சூடான் மக்கள் பாதுகாப்புப் படை, இந்த நடவடிக்கை “ஆபரேஷன் எண்ட்யூரிங் பீஸ்” என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை விரைவில் தொடங்கும் என ராணுவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூன்று மாவட்டங்களில் முழு வெளியேற்ற உத்தரவு

ஜோங்க்லே மாநிலத்தில் உள்ள நியிரோல், உரோர் மற்றும் அகோபோ மாவட்டங்களில் வசிக்கும் அனைத்து பொதுமக்களும் பாதுகாப்புக்காக அரசு கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு உடனடியாக இடம்பெயர வேண்டும் என ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், ஐக்கிய நாடுகள் தென் சூடான் அமைதி படை (UNMISS) பணியாளர்கள் மற்றும் அரசு அல்லாத அமைப்புகளில் பணிபுரியும் அனைவரும் 48 மணி நேரத்திற்குள் இந்த மாவட்டங்களை விட்டு வெளியேற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளுக்குப் பிந்தைய கடுமையான மோதல்கள்

ஐக்கிய நாடுகள் அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, 2017க்குப் பிறகு இதுவரை காணாத அளவில் வன்முறை மோதல்கள் கடந்த சில மாதங்களாக தென் சூடானை உலுக்கியுள்ளது.

ஜோங்க்லே மாநிலம் எத்தியோப்பியா எல்லைக்கு அருகே அமைந்துள்ளதால், இந்த பகுதி மூலோபாய ரீதியாக முக்கியத்துவம் பெற்றதாகும். இங்கு, அரசு படைகள் மற்றும் சுடான் மக்கள் விடுதலை படை–எதிரணி (SPLA-IO) ஆதரவாளர்களுக்கிடையே கடுமையான சண்டைகள் நடைபெற்று வருகின்றன.

தலைநகரை நோக்கிய எச்சரிக்கை

கடந்த வாரம் SPLA-IO அமைப்பு தனது படைகள் தலைநகர் ஜூபாவை நோக்கி முன்னேறுமாறு அழைப்பு விடுத்தது. இது உள்நாட்டுப் போரின் புதிய கட்டமாக மாறும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், ஜோங்க்லே மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள பாஜூட் நகரத்தை SPLA-IO கைப்பற்றியது. இதனால் மாநிலத் தலைநகர் போர் நகருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.

UNMISS வெளியிட்ட அறிக்கையில், ஜோங்க்லே மாநிலத்தில் இதுவரை சுமார் 1.8 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என நாட்டின் அரசியல் தலைமையிடம் ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

இதனிடையே, மருத்துவ மனிதாபிமான அமைப்பான “மெடிசின்ஸ் சான்ஸ் ஃப்ரண்டியர்ஸ்” (MSF), பாதுகாப்பு நிலை கடுமையாக மோசமடைந்ததை தொடர்ந்து அகோபோ மாவட்டத்தில் இருந்து தனது முக்கிய பணியாளர்களை வெளியேற்றியதாக அறிவித்துள்ளது.

தென் சூடான் துணைத் தலைவர் ரீக் மச்சார் தலைமையிலான SPLA-IO படைகள் மற்றும் அரசு படைகளுக்கிடையே 2013–2018 காலகட்டத்தில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் சுமார் 4 லட்சம் பேர் உயிரிழந்தனர். இன அடிப்படையில் நடந்த அந்தப் போர், நாட்டை பெரும் மனிதாபிமான பேரழிவில் தள்ளியது.

2018 ஆம் ஆண்டு அமைதி ஒப்பந்தம் வன்முறையை கட்டுப்படுத்தியிருந்தாலும், உள்ளூர் மோதல்கள் தொடர்ந்து நீடித்து வந்த நிலையில், தற்போதைய சூழல் மீண்டும் நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

ஜோங்க்லே மாநிலத்தில் தொடங்கவுள்ள ராணுவ நடவடிக்கை, தென் சூடானின் அரசியல் நிலைத்தன்மை, பிராந்திய பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான சூழ்நிலையை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து சர்வதேச சமூகம் தீவிரமாக கவனித்து வருகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *