ஜனவரி 9 | வட ஐரோப்பா: வட ஐரோப்பாவை தாக்கியுள்ள ‘கோரெட்டி’ புயல், கடும் காற்று, கனமான பனிப்பொழிவு மற்றும் உறைபனி காரணமாக பல நாடுகளில் இயல்பு வாழ்க்கையை முடக்கி உள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ள நிலையில், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன; ரயில் போக்குவரத்தும் பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.
பிரிட்டனை முதலில் தாக்கிய புயல், பின்னர் கிழக்கு நோக்கி ஐரோப்பா முழுவதும் பரவியது. ஜெர்மனியில், இது கடந்த பல ஆண்டுகளில் ஏற்பட்ட மிகக் கடுமையான குளிர்கால வானிலை நிகழ்வுகளில் ஒன்றாக அரசுத் தரப்பு மதிப்பிட்டுள்ளது.

பிரான்சில், குறிப்பாக நார்மண்டி மற்றும் பிரிட்டானி பகுதிகளில் சுமார் மூன்று இலட்சத்து எண்பதாயிரம் வீடுகள் மின்சார விநியோகத்தை இழந்தன. பகல் நேரத்திற்குள் சில பகுதிகளில் மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டாலும், ஆயிரக்கணக்கான வீடுகள் இன்னும் பாதிப்பில் உள்ளன. பிரிட்டனில் ஸ்காட்லாந்து மற்றும் மத்திய இங்கிலாந்து பகுதிகளிலும் பல வீடுகள் மின்தடையை சந்தித்துள்ளன.

நெதர்லாந்தில், மீண்டும் பனிப்பொழிவு தீவிரமடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிரான்சின் வடமேற்குப் பகுதிகளில் மணிக்கு 150 கிலோமீட்டருக்கு மேல் காற்று வேகம் பதிவாகியுள்ளதுடன், சில இடங்களில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிக வேகமும் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக பாரிஸ்–நார்மண்டி இடையிலான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.

பிரான்சின் அணு மின் நிலையங்களில் ஒன்றில், உயர் மின்கம்பி சேதமடைந்ததால் இரண்டு அணு உலைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதனால் மேற்கத்திய ஐரோப்பாவில் மொத்த மின்சார விலைகள் உயர்வடைந்துள்ளன. பல இடங்களில் வீடுகளின் கூரைகள் சேதமடைந்ததுடன், மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.
இங்கிலாந்தின் மேற்கு மிட்லாண்ட்ஸ் பகுதியில், கனமான பனி காரணமாக ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டன. பொதுமக்கள் அவசியம் இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நகரப் பகுதிகளில், பனியில் நடமாட பொதுமக்கள் கடுமையாக சிரமப்பட்டனர்.
ஜெர்மனியின் வட பகுதியில், நீண்ட தூர ரயில் சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன. ஹாம்பர்க் விமான நிலையத்தில் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் தாக்கம் விளையாட்டு நிகழ்வுகளிலும் தெரிந்துள்ளது; முக்கிய கால்பந்து போட்டி ஒன்று ஒத்திவைக்கப்பட்டது. தொழிற்துறையிலும் பாதிப்பு ஏற்பட்டு, சில வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
ஹங்கேரியில், கனமான பனியில் சிக்கிய வாகன ஓட்டிகளுக்கு உதவ இராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. மேற்குப் பால்கன் நாடுகளிலும் கடந்த சில நாட்களாக வானிலை பாதிப்பு நீடித்து வருகிறது. அல்பேனியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், துருக்கியின் வடகிழக்குப் பகுதிகளில் பல கட்டிடங்களின் கூரைகள் புயலில் சேதமடைந்துள்ளன.
இந்த புயல் தாக்கம், ஐரோப்பா முழுவதும் போக்குவரத்து, மின்சாரம் மற்றும் அத்தியாவசிய சேவைகளின் மீது காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் அழுத்தத்தை மீண்டும் நினைவூட்டுகிறது. அடுத்த சில நாட்களும் கடும் குளிர் நிலை நீடிக்கலாம் என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதால், மனிதாபிமான உதவிகளும் அவசர சேவைகளும் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.