ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் திங்கள்கிழமை நடந்த கார் குண்டு வெடிப்பில், ரஷ்ய ராணுவத்தின் மூத்த அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் ஃபானில் சர்வரோவ் உயிரிழந்தார். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக, இதுபோன்று மூன்றாவது முறையாக உயர்நிலை ராணுவ அதிகாரி கொல்லப்பட்ட சம்பவமாக இது பதிவாகியுள்ளது.
ரஷ்ய ஆயுதப் படைகளின் பொது தளபதியின் அலுவலகத்தில் செயல்பாட்டு பயிற்சி இயக்குநரகத்தின் தலைவராக இருந்த சர்வரோவ், குண்டு வெடிப்பில் படுகாயமடைந்து உயிரிழந்ததாக ரஷ்ய விசாரணை குழு தெரிவித்துள்ளது. அவருக்கு 56 வயது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில், இந்த தாக்குதலின் பின்னணியில் உக்ரைன் உளவுத்துறையின் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகமும் விசாரிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைனில் ராணுவ நடவடிக்கைகளை தொடங்கியதிலிருந்து, ரஷ்யாவிற்குள் பல ராணுவ அதிகாரிகள் மற்றும் பொது பிரமுகர்கள் கொல்லப்பட்ட சம்பவங்களுக்கு உக்ரைனை ரஷ்ய அரசு குற்றம் சாட்டி வருகிறது. சில தாக்குதல்களுக்கு உக்ரைன் பொறுப்பேற்றிருந்தாலும், சர்வரோவ் மரணம் குறித்து இதுவரை உக்ரைன் எந்த பதிலும் அளிக்கவில்லை.
இந்த சம்பவம் குறித்து ரஷ்ய அதிபர் வ்லாதிமிர் புடினுக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டதாக கிரெம்லின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வரோவ், செச்சன்யா போரிலும், சிரியாவில் ரஷ்ய ராணுவ நடவடிக்கைகளிலும் பங்கேற்ற அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு, ரஷ்ய ராணுவத்தின் அணு, உயிரியல் மற்றும் இரசாயன பாதுகாப்புப் பிரிவின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிறில்லோவ், அவரது குடியிருப்புக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த மின்சார ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் உயிரிழந்தார். அந்த தாக்குதலில் அவரது உதவியாளரும் பலியானார். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக ஒரு வெளிநாட்டு நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
மேலும், இந்த ஆண்டு ஏப்ரலில், ரஷ்ய பொது தளபதியின் முக்கிய செயல்பாட்டு பிரிவின் துணைத் தலைவராக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் யாரோஸ்லாவ் மொஸ்கலிக், தனது குடியிருப்பருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் உயிரிழந்தார். அந்த சம்பவத்திலும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இந்த தொடர் தாக்குதல்கள், உக்ரைன்–ரஷ்ய மோதல் ராணுவக் களத்தைத் தாண்டி, இரு நாடுகளுக்கிடையேயான மறைமுக தாக்குதல் மற்றும் பதிலடி நடவடிக்கைகளாக மாறி வருவதை காட்டுவதாக பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுகின்றனர். இதே நேரத்தில், ஐரோப்பா முழுவதும் குழப்பம் மற்றும் சிதைவுகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ரஷ்யா ஈடுபட்டு வருவதாக மேற்கு நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. அந்த குற்றச்சாட்டுகளை ரஷ்யா மறுத்துள்ளது.
மாஸ்கோவில் நடந்த இந்த புதிய கார் குண்டு வெடிப்பு, ரஷ்ய உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் ராணுவ அதிகாரிகள் பாதுகாப்பு குறித்து மீண்டும் தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளது.