72 மணி நேரம் மரத்தை அணைத்து போராட்டம்: கென்யா காலநிலை செயற்பாட்டாளர் ட்ரூபெனா முத்தோனி புதிய சாதனை

WH News Bureau
2 Min Read

(நியேறி 11-12-2025 கென்யா)- காலநிலை மாற்றம் மற்றும் காடழிப்பு அபாயங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், கென்யாவைச் சேர்ந்த காலநிலை செயற்பாட்டாளர் ட்ரூபெனா முத்தோனி, தொடர்ந்து 72 மணி நேரம் ஒரு மரத்தை அணைத்தபடி இருந்து, தனது முந்தைய சாதனையைத் தானே முறியடித்துள்ளார்.

இதற்கு முன்பு 48 மணி நேரம் மரத்தை அணைத்திருந்ததே அவரது சாதனையாக இருந்த நிலையில், இந்த முறை அதை மேலும் நீட்டித்து புதிய உயரத்தை எட்டியுள்ளார். “இந்த அமைதியான போராட்டம் மனிதநேயத்தை நேரடியாகத் தொடுகிறது. வழக்கமான போராட்டங்களில் குழப்பங்கள் பேசப்படும்; ஆனால் இது எல்லா வேறுபாடுகளையும் கடந்து மனித உணர்வை எழுப்புகிறது,” என அவர் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இந்தச் சவாலுக்காக, நியெரி நகரில் உள்ள அரசு வளாகத்தில் இருக்கும் ஒரு பாரம்பரிய உள்ளூர் மரத்தை முத்தோனி தேர்வு செய்தார். சில நேரங்களில் தூக்கம் வருவதற்கருகில் சென்றாலும், அவருக்கு ஆதரவாக இருந்தவர்கள் அவரை விழித்தெழ வைத்தனர். கின்னஸ் உலக சாதனை கண்காணிப்பாளர்களுக்கான கட்டணத்தையும், ஆதரவாளர்கள் சிலர் இணைந்து ஏற்றுக்கொண்டனர்.

இந்த போராட்டத்தின் மூலம், காலநிலை மாற்றம் மற்றும் காடழிப்பு ஏற்படுத்தும் அபாயங்களை பொதுமக்கள் உணர வேண்டும் என்பதே தனது நோக்கம் என முத்தோனி கூறினார். மேலும், அவர் அணிந்திருந்த உடை பற்றியும் விளக்கம் அளித்தார். “கருப்பு நிறம் ஆப்பிரிக்க சக்தி, போராட்டம் மற்றும் திடத்தன்மையை குறிக்கிறது. பச்சை மறுவனமயமாக்கல், புதுப்பித்தல் மற்றும் நம்பிக்கையைச் சொல்கிறது. சிவப்பு, பாரம்பரிய மக்களின் எதிர்ப்பையும் முன்னணியில் நிற்கும் தைரியத்தையும் குறிக்கும்; நீலம், நீர் மற்றும் கடல்களை பாதுகாக்கும் போராளிகளின் அடையாளம்,” என அவர் தெரிவித்தார்.

ஆப்பிரிக்க நாடுகள் உலகில் மிகக் குறைந்த கார்பன் உமிழ்வை ஏற்படுத்தும் பகுதிகளாக இருந்தாலும், காலநிலை மாற்றத்தின் கடும் தாக்கங்களை அதிகமாக எதிர்கொள்ளும் நிலை உருவாகும் என விஞ்ஞானிகள் நீண்ட காலமாக எச்சரித்து வருகின்றனர். அந்த எச்சரிக்கையை மனிதநேயப் போராட்டமாக உலகுக்கு நினைவூட்டும் முயற்சியாக, ட்ரூபெனா முத்தோனியின் இந்தச் சாதனை பார்க்கப்படுகிறது

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *