நாம் தினமும் சாப்பிடும் உணவுகள், உடல் பருமன் பிரச்சினைக்கும் காலநிலை மாற்றத்துக்கும் ஒரே நேரத்தில் காரணமாக இருப்பதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. குறிப்பாக, அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் மாமிசம் அதிகம் உள்ள உணவு பழக்கம், மனித உடல்நலத்தையும் இயற்கையையும் கடுமையாக பாதிக்கிறது என வியாழக்கிழமை வெளியான ஃப்ராண்டியர்ஸ் இன் சயின்ஸ் (அறிவியல் ஆய்வு இதழ்) தெரிவிக்கிறது.
இந்த ஆய்வு, அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளும் மாட்டிறைச்சி அதிகம் உள்ள உணவு பழக்கங்களும் மனித உடல்நலக் கோளாறுகளை அதிகரிப்பதோடு, சுற்றுச்சூழல் சேதத்தையும் வளர்த்துவருகின்றன என்று தொடர்புபடுத்துகிறது.
உலகம் முழுவதும் தற்போது ஒரு பில்லியனுக்கும் அதிகமானோர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை வருங்காலங்களில் மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், நாம் உண்ணும் உணவுகளை உற்பத்தி செய்யும் முறைகள், உலகளவில் வெளியிடப்படும் மாசு வாயுக்களில் பெரும் பங்கைக் கொண்டுள்ளதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.

மாமிச உற்பத்திக்காக அதிக அளவில் கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. இதனால் காடுகள் அழிக்கப்படுவதுடன், சூட்டை அதிகரிக்கும் மீத்தேன் வாயுவும் அதிகமாக வெளியேறுகிறது. இதுவே காலநிலை மாற்றத்தை வேகப்படுத்துகிறது.
உடல் பருமனை குறைக்க மருந்துகள், அறுவைச் சிகிச்சைகள் இருந்தாலும், அவை பிரச்சினையின் மூல காரணத்தை தீர்க்காது என ஆய்வு கூறுகிறது. மலிவாக கிடைக்கும் ஆரோக்கியமற்ற உணவுகளே இந்த சிக்கல்களின் அடிப்படை காரணம் எனவும் குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலையை மாற்ற, சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளுக்கு வரி விதிப்பது, உணவுப் பொருட்களில் தெளிவான தகவல்கள் இடுவது, குழந்தைகளை குறிவைக்கும் ஆரோக்கியமற்ற உணவு விளம்பரங்களை கட்டுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் தேவை என ஆய்வு பரிந்துரைக்கிறது.
மேலும், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற இடங்களில் ஆரோக்கியமான உணவுகளை வழங்கினால், மக்கள் உணவு பழக்கங்களில் நல்ல மாற்றம் ஏற்படும். அனைவருக்கும் சுவையான, ஆரோக்கியமான உணவுகள் எளிதாக கிடைக்கும்போது தான், உடல் பருமன் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகளுக்கு நீடித்த தீர்வு கிடைக்கும் என ஆய்வு முடிவில் கூறுகிறது.