வெள்ளிக்கிழமை, சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். (Islamic State) அமைப்பின் டஜன் கணக்கான இலக்குகள் மீது அமெரிக்க ராணுவம் பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்க படையினருக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக,அமெரிக்கா தலைமையிலான கூட்டணி, சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். சந்தேகப்படுவோரைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல்கள் மற்றும் தரை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகளில் சிரியாவின் பாதுகாப்புப் படைகளும் பல்வேறு நேரங்களில் இணைந்து செயல்பட்டு வருகின்றன. கடந்த வார இறுதியில் சிரியாவில் நடந்ததாக சந்தேகிக்கப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். தாக்குதலில் அமெரிக்க பணியாளர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்திருந்தார்.
இந்த தாக்குதல்களில் “ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள், கட்டமைப்புகள் மற்றும் ஆயுத களஞ்சியங்கள்” குறிவைக்கப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்தார். இந்த நடவடிக்கைக்கு “ஆபரேஷன் ஹாக்ஐ ஸ்ட்ரைக்” எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.“இது ஒரு புதிய போர் தொடக்கம் அல்ல; பழிவாங்கலின் அறிவிப்பு. இன்று நாம் எதிரிகளை வேட்டையாடி அழித்தோம். இதுவே தொடரும்,” என அவர் கடுமையாக தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பதிவிட்ட ட்ரம்ப், இந்த தாக்குதல்களுக்கு சிரிய அரசின் முழு ஆதரவும் இருப்பதாகவும், ஐ.எஸ்.ஐ.எஸ். மீது “மிகக் கடுமையான பதிலடி” கொடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். வடகரோலினாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், டிசம்பர் 13 அன்று கூட்டணி படைகள் மீது நடந்த தாக்குதலுக்குப் பொறுப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினர்களுக்கு இது “மாபெரும் அடியாக” இருக்கும் என்றார்.
அமெரிக்க மத்திய கட்டளை (U.S. Central Command) வெளியிட்ட அறிக்கையில், மத்திய சிரியா முழுவதும் 70-க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டதாகவும், இந்த நடவடிக்கையில் ஜோர்டானின் போர் விமானங்களும் ஆதரவு வழங்கியதாகவும் தெரிவித்தது. மேலும், அமெரிக்க F-15, A-10 போர் விமானங்கள், அபாச்சி ஹெலிகாப்டர்கள் மற்றும் HIMARS ராக்கெட் அமைப்புகள் பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
இதற்கிடையில், சிரியாவின் வெளிநாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை ஒழிப்பதில் தங்களின் உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது. “சிரியா நிலப்பரப்பில் தீவிரவாத அமைப்புகளுக்கு எந்தப் பாதுகாப்பான தங்குமிடமும் இருக்க அனுமதிக்கமாட்டோம்,” என அதில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த சனிக்கிழமை, மத்திய சிரியாவின் பழமையான நகரமான பால்மைராவில், அமெரிக்க மற்றும் சிரிய படைகள் பயணித்த கான்வாயை குறிவைத்து நடந்த தாக்குதலில், இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்களும் ஒரு பொதுமக்கள் மொழிபெயர்ப்பாளரும் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்தியவர் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது. இந்த சம்பவத்தில் மேலும் மூன்று அமெரிக்க வீரர்கள் காயமடைந்தனர்.
தற்போது சிரியாவில் சுமார் 1,000 அமெரிக்க படைவீரர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். சிரிய உள்துறை அமைச்சகம், தாக்குதல் நடத்தியவர் சிரிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவராகவும், ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
13 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு, கடந்த ஆண்டு முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். தற்போதைய சிரிய அரசு, முன்னாள் கிளர்ச்சியாளர்களால் அமைக்கப்பட்டதாகவும், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் மோதிய முன்னாள் அல்கொய்தா பிரிவைச் சேர்ந்த சிலரும் இதில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐ.எஸ்.ஐ.எஸ். எதிரான அமெரிக்க தலைமையிலான கூட்டணியுடன் சிரிய அரசு தொடர்ந்து ஒத்துழைத்து வருகிறது. கடந்த மாதம், சிரிய அதிபர் Ahmed al-Sharaa வெள்ளை மாளிகைக்கு பயணம் செய்தபோது, இருதரப்புகளுக்கும் இடையே முக்கிய உடன்பாடு எட்டப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.